Thursday 30 January 2014

தேசிய புற்றுநோய் திசு வங்கி – சென்னை ஐஐடி-யில் அமைகிறது..!




சென்னை ஐஐடியில் முதல் முறையாக ‘தேசிய புற்றுநோய் திசு உயிரி வங்கி’யை நிறுவ முடிவு செய்துள்ளது.அதாவது, சென்னையைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் புற்று நோயாளிகளின் திசுக்கள் அவர்களுடைய சம்மதத்துடன் சேகரிக்கப்பட்டு இந்த வங்கியில் பாதுகாக்கப்பட உள்ளன.அவ்வாறு பாதுகாக்கப்படும் திசுக்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் மற்றும் வழிமுறைகள் குறித்த முயற்சிகள் எடுக்கப்படும்

சென்னை ஐஐடியில் உள்ள உயிரி தொழில் நுட்பத்துறையில் ‘தேசிய புற்றுநோய் திசு உயிரி வங்கி’ (நேஷனல் கேன்சர் திசு பயோபாங்க்) அமைக்கப்படுகிறது. இந்த பயோபாங்க்கை, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், சென்னை ஐஐடியும் இணைந்து அமைக்கின்றன.இதை நிறுவுவதற்காக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை ரூ.27 கோடியே 81 லட்சம் நிதி வழங்கியுள்ளது. புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் தாமாகவே முன்வந்து புற்று நோய் திசுக்களை வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். சமூகம் சார்ந்த இந்த முயற்சி புற்றுநோய் அறிகுறிகள், புற்றுநோயை கண்டறிதல், பின்னர் சிகிச்சை அளித்தல் போன்றவற்றுக்கு உறுதுணையாக இருக்கும்.

சென்னை புற்றுநோய் ஆய்வு மற்றும் நிவாரண அறக்கட்டளையுடன் இணைந்து சென்னை ஐஐடி இந்த பணியை தொடங்கியுள்ளது. அத்துடன் பல்வேறு புற்றுநோய் சிகிச்சை மையங்கள், அமைப்புகளுடன் ஒன்றிணைந்தும் செயல்படும். மேலும், புற்றுநோயாளிகள் தன்னார்வத்துடன் முன்வந்து புற்றுநோய் திசுக்களை நன்கொடையாக வழங்குவதையும் ஊக்கப்படுத்தும். திசுக்கள் எவ்வளவு பெறப்படுகிறதோ, அவற்றின் அளவைப் பொறுத்தும், குறிப்பிட்ட திசுக்களை பாதுகாக்கவும் ஒரு மத்திய திசு வங்கியாக ஐஐடி வளாகத்தில் அமைக்கப்படவுள்ள, இந்த வங்கி செயல்பட உள்ளது.

குறைந்த பக்கவிளைவுகள் கொண்டதாகவும், முன்னதாகவே புற்றுநோயை கண்டறிந்து தடுக்கின்ற வகையில் தனிப்பட்ட முறையில் சிகிச்சை பெறும் வகையில் புற்றுநோயை கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புற்று நோய் திசு வங்கிக்காக சென்னை ஐஐடியின் பங்காக ரூ.3 கோடியே 9 லட்சம் நிதியும் வழங்கியுள்ளது. மேலும் இந்த வங்கி செயல்படுவதற்காக ஐஐடி வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடியில் பாதுகாப்புடன் கூடிய வைப்பறையை கட்ட இடம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 5 ஆண்டுகள் வரை 25 ஆயிரம் புற்றுநோய் திசு மாதிரிகளை இங்கு சேமித்து வைக்க முடியும்.

அத்துடன் திசுக்களின் வடிவங்களை காட்சிப்படுத்தும் சக்தி வாய்ந்த கருவிகள், செல் சேமிப்பு வசதிகள் இந்த பயோ வங்கியில் அமையும். இந்த வங்கி தொடர்பாக சென்னை ஐஐடியில் பயிற்சி மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில் 30ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை 3 ‘கேன்சர்கான் 2014’ என்ற 3 நாள் கருத்தரங்கு சென்னை ஐஐடியில் நடக்கிறது. ஐஐடியின் உயிரி தொழில் நுட்பத்துறையும், புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.

Tags: , , , , ,

0 Responses to “தேசிய புற்றுநோய் திசு வங்கி – சென்னை ஐஐடி-யில் அமைகிறது..!”

Post a Comment

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.