Recent Articles

Friday, 24 January 2014

20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்..!

Friday, 24 January 2014 - 0 Comments




1. தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

3. மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப்பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19.நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்.

Sunday, 12 January 2014

‘ஜில்லா’ ! ஜெயிக்குமா? - திரை விமர்சனம்...

Sunday, 12 January 2014 - 0 Comments







ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.


அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.


அரசியலில் விஜய்க்கு மோகன்லால் முக்கியத்துவம் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே மகத் விரும்பவில்லை. இளைஞரணித் தலைவர் பதவியை விஜய்க்கு தருவதை கடுமையாக எதிர்க்கிறார். ஆனாலும் மோகன்லால் விஜய்யைதான் அரசியலில் வளர்க்க விரும்புகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்று அப்பா தன்னை வெறுப்பதாக கருதிக்கொள்ளும் மகத் , கடுப்பாகி ஹாஃப் ஹாஃபாக சரக்கடித்து, ஃபுல் போதையில், மோகன்லாலிடம் பணிபுரியும் பாஷா என்பவரின் மகளை கதறக் கதற…


இந்த அடாத செயலுக்காக மகத்தை தண்டிக்க வேண்டுமென்று விஜய் போர்க்கொடி தூக்குகிறார். விஜய்யை போட்டால்தான் தான் உயிரோடு இருக்க முடியுமென்று மகத் அவர் மீது கொலைமுயற்சியை நடத்துகிறார். விஜய் இதிலிருந்து தப்பிக்க, மிருகமாக மாறிவிட்ட மகத் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பூர்ணிமாவின் மகளையும் (அதாவது விஜய்க்கு டைரக்ட், மகத்துக்கு இன்டைரக்ட் அக்காவை), அவரது கணவரையும்கூட போட்டுத் தள்ளிவிடுகிறார். அக்காவை இழந்த விஜய் எரிமலையாய் வெடிக்கிறார். தன்னுடைய மகளை கற்பழித்துக் கொன்ற மகத்தை ஒழிக்க வேண்டுமென்று விஜய்யோடு மோகன்லாலின் நம்பிக்கைக்குரிய சகாவான பாஷாவும் கரம் கோர்க்கிறார். மகத்தை போட்டுத் தள்ளுகிறார் விஜய்.


தூங்கிவிடாதீர்கள். ட்விஸ்ட் மிச்சமிருக்கிறது.


இதுவரை படத்தில் காட்டப்பட்டது மாதிரி மோகன்லால் அவ்வளவு பெரிய யோக்கிய கொண்டையெல்லாம் கிடையாது. தன் ரத்தத்தில் பிறந்த மகனான மகத்தை நன்றாக வாழவைக்க, விஜயை ஒரு பலியாடாகதான் வளர்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் ஒரிஜினல் தந்தை அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதும் பொய். அவரை கொன்றவரே மோகன்லால்தான் என்று பழைய கதைகளை தெரிந்த பாஷா சொல்கிறார்.


க்ளைமேக்ஸ்.


மோகன்லாலை பார்க்க வருகிறார் விஜய். இவரை எதிர்கொள்ள முடியாமல் கூசிப்போகும் மோகன்லால், “நல்லவன், கெட்டவன் பாகுபாடெல்லாம் உலகத்தில் இல்லை. இலட்சியங்களை அடைய அனைவரும் சிறு சிறு தவறுகளை செய்தவர்கள்தான்” என்று தன்னுடைய கடந்தகால தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். விஜய்யிடம் தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் போட்டு கொடுத்துவிட்ட பாஷாவை போட்டுத் தள்ளுமாறு ஆணையிடுகிறார். அதை மறுக்கும் விஜய், மோகன்லாலின் காலில் விழுந்து வணங்கி “யார் என்ன சொன்னாலும் நீ மட்டும்தான் என் அப்பா. என்னோட ஒரிஜினல் அப்பன் இப்போ உயிர்பிழைச்சி வந்தாலும் கூட, உன்னைதான் என் அப்பனா ஏத்துப்பேன். ஏன்னா நீ என்னை அப்படி வளர்த்திருக்கே” ரேஞ்சுக்கு எட்டு, பத்து நிமிஷத்துக்கு முழம் முழமாய் செண்டிமெண்டை கொட்டி வசனம் பேசுகிறார். அவரும், பாஷாவும் சில்லவுட்டாக தனியாக இருக்கும் மோகன்லாலை விட்டுக் கிளம்புகிறார்கள்.


இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.


2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும். சாய்குமாரின் நடிப்பு மட்டும் நன்றாக பேசப்பட்டது. அவருக்கு அவ்வருடத்துக்கான ஃபிலிம்பேர், நந்தி விருதுகள் இப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சில காலம் முன்பு இப்படம் ‘பதவி’ என்கிற பெயரில் டப் ஆகி தமிழிலும் ரிலீஸ் ஆனது. வந்த சுவடே யாருக்கும் தெரியவில்லை.


பின்னணி இப்படியிருக்க, ‘வேலாயுதம்’ ஷூட்டிங்கில் ஜெயம் ராஜாவின் உதவியாளராக இருந்த நேசன் சொன்ன மதுரைப் பின்னணி கதை ரொம்பவும் பிடித்துப்போய் ‘ஜில்லா’வில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கதையளக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை. தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல. நேசன் ஏற்கனவே ‘முருகா’ என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய்க்கு நல்ல ஸ்க்ரிப்ட் கேட்க தெரியவில்லை. தமிழில் விஜய் நடித்தால் ஷ்யூர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஏராளமான படங்கள் சமீபமாகவே தெலுங்கில் வந்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அரதப்பழசான சப்ஜெக்ட்டுகளை ஏன்தான் குறிவைத்து தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.

Saturday, 11 January 2014

மீண்டும் இணையும் ‘ஊதா கலரு ரிப்பன்’ ஜோடி..!

Saturday, 11 January 2014 - 0 Comments



திரையுலகை பொறுத்தவரை ஏதாவது ஒரு ஜோடி முதன் முறையாக இணைந்து நடித்து அந்த படம் வெற்றி பெற்றால் சொல்லவே வேண்டாம்.

உடனே அந்த ஜோடிக்கு ராசியான ஜோடி என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதோடு நில்லாமல் மீண்டும் அந்த ஜோடியை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கங்கனம் கட்டிகொண்டு வருவார்கள். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளிவந்து பட்டித் தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய படம் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷிடம் அசோஸியேட்டாகப் பணியாற்றிய ”பொன்ராம்” இயக்கியிருந்தார்.

இந்த வெற்றியைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யாவை ஜோடியாக்கி மீண்டும் ஒரு புதிய படத்தை எடுக்க இருக்கிறார்களாம். இந்த படத்தைத் தயாரிக்கப் போகிறவர் சிவகார்த்திகேயனின் அண்ணன் தனுஷ்தான். தனுஷ் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ”எதிர்நீச்சல்” என்ற படத்தை தயாரித்து இருந்தார்.

முதலில் இந்த புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமன்னா, அமலா பால் ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்கதான் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், சம்பள விஷயத்தில் இருவரும் ஒத்து வராததால் இறுதியில் ஸ்ரீதிவ்யாவையே மீண்டும் ஜோடியாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். எனவே, சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா ஜோடியின் வெற்றி 2014ஆம் ஆண்டிலும் தொடருமா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வைகுண்ட ஏகாதசி அன்று செய்யக்கூடாதது



ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. 

(கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். 

இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். 

காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். 

அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

“கல்லா கட்டவில்லை ஜில்லா''

 


விஜய் நடித்து வெளியான ஜில்லா படம், கடந்த 2 நாட்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரும் செலவு செய்து படத்தை வாங்கி வெளியிட்டுள்ள மதுரை விநியோகஸ்தர்கள், எதிர்பார்த்த அளவு ஜில்லா படம் கல்லா கட்டாததால், தகவல் தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் மிக நீளமாக இருப்பதாகவும், தேவையற்ற காட்சிகளை நீக்கி, படத்தை விறுவிறுப்பாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததால், ஒரு குழு சென்னையில் இருந்து மதுரைக்கு வந்துள்ளது.


அதே நேரம் அஜீத் நடித்து வெளியாகியுள்ள வீரம் படம் மதுரை பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், அஜீத்தின் முந்தைய ஆரம்பம் படம் பெரிய அளவில் வசூலை அள்ளிக் குவிக்காவிட்டாலும், விநியோகஸ்தர்களின் கையைக் கடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை ரசிகர்களிடையே, “கல்லா கட்டவில்லை ஜில்லா; சோரம் போகவில்லை வீரம்” என்ற குறுஞ்செய்திகள் அதிக அளவில் பரப்பப் பட்டு வருகின்றன.

Friday, 10 January 2014

எச்சரிக்கை.!!!! நான்ஸ்டிக் குக்வேர் பயன்படுத்துபவர்களே..!

Friday, 10 January 2014 - 0 Comments




இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது.

இது பற்றி வெஸ்ட் விர்ஃதுஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை.

இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

 மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.

பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது

சுவாமி விவேகானந்தர் - ஒருவரின் பண்ணை வீட்டில் ?




ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.